Monday, March 21, 2022

ஒரு பன்றி 
தெருவோரக் குழிகளில் 
புதிய சாக்கடைகளைக் 
கனவு காண்கையில்  
(எனக்கு சொந்தமான)
இவள் சிசு 
என் நினைவின் மேல் 
ஒன்றுக்கிருக்கும்

- திரு.கலாப்பிரியா 
கூட்டிலிருந்து 
தவறி விழுந்த 
குஞ்சுப் பறவை 
தாயைப் போலவே 
தானும் பறப்பதாய் 
நினைத்தது..
தரையில் மோதிச் 
சாகும் வரை 

- திரு. கலாப்பிரியா 

Sunday, March 20, 2022

சிறு சவப்பெட்டியை  அறைய 
சிறிய சுத்தியலை பயன்படுத்துவீர்களா 
என்ற கேள்வியில் 
என்ன தவறிருக்கிறது..

- திரு. நரன் 
(லாகிரி தொகுப்பிலிருந்து) 
ஆமை  அதுவாகத்தான் 
போகிறது 
நாம்தான் சொல்கிறோம் 
மெதுவாக என்று..
       - thiru.ராஜா சந்திரசேகர்

ஈடு

வயிற்றில் வாங்கிகொள்ளவியலுமா 
அம்மாவை - 
இறப்பை இறப்பால் 
ஈடு செய்ய நிகழுமா - 
அன்பிற்கு ஈடாகாது 
அன்பும் .

- thiru.சே. பிருந்தா "வீடு முழுக்க வானம்" தொகுப்பிலிருந்து.

Wednesday, April 24, 2013

போதாமையில் இசைத்தல்



வழக்கம்போல
அவன் என்னிடம் கேட்கிறான்
மல்லிகைப்பூ வாங்கி வரவா என்று
வேண்டாம்
என்று சொல்கிறேன் எனக்கே கேட்காமல்
இன்று என்ன
இருபத்து நாலு தானே ஆகிறது
அதற்குள்ளாகவா என்கிறான்
தெரியவில்லையே என்கிறேன்
பின்பு
ஏதாவது வாங்கி வாருங்கள் என்று
சொல்லும்போதே
அலைபேசி துண்டிக்கப்பட்டது
அவன் வருகிறான்
நான் இருக்கிறேன்
அவன் இருக்கிறான்
அவன் அப்படியிருக்க வேண்டியதில்லை
கண்கள் மூடிக் கிடக்கிறேன்
அமைதியாக இருக்கப் பழக்கித் தந்தது போலவே
போதாமையையும் பழக்கப் படுத்தியிருக்கும்
அவனுக்கு
நான் போதவில்லை என்பதை
உணர்ந்து தளர்கையில்
இரவு
அசைவே அற்றுக் கடந்துகொண்டிருக்கிறது.

- சக்தி ஜோதி

http://www.kalachuvadu.com/issue-157/page45.asp

Saturday, August 25, 2012

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

-ஆத்மாநாம்

Thursday, August 23, 2012

இணையத்தில் தமிழ் இலக்கியங்கள்

சங்கம் ( Sangam Literature)



புதுமைபித்தன் முதல் எஸ்.ரா வரை(நவீன இலக்கியங்கள் - Contemporary works)


(தங்களுக்கு தெரிந்த  தொகுப்பு வலைபூக்களை  மறுமொழியில் சேர்க்கவும். விமர்சன தளங்களாக அல்லாமல் கதை/கவிதை தொகுப்பின் பதிவேற்றங்களின் முகவரிகளை மட்டும் கொடுக்கவும். நன்றி.)

Tuesday, August 21, 2012


பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்
- japanese Haiqu (Basho)
பி.கு: பாஷோவின் மிகச்சிறந்த ஹைக்கூக்களில் ஒன்று இது. வியப்படைகிரீர்கள? மறுபடி அந்த கவிதையை படித்து பாருங்கள். பின் இதை தொடருங்கள்.
படித்து முடித்தவுடன் உங்கள் மனதில்  ஒரு குளத்தில் தவளை குதிக்கும் காட்சியும் அதனூடே 'கொப்ளுக்' சத்தமும் கேட்டதா? மூன்று வரிகளில் உங்களுக்குள்ளாக ஒரு சிறு காட்சியை உங்களுக்கு தெரியாமலே ஓடவைத்துவிட்டார் கவிஞர்.
இன்னும் சில முத்துக்கள் இங்கு - http://www.haikupoetshut.com/basho1.html

Sunday, June 24, 2012

என்மீது கோபங்கொள்ளுங்கள்
உங்கள் கையிலிருக்கும் பொருளைத்
தூக்கியெறியுங்கள்
கொலைவெறித்தாக்குதல் நடக்கட்டும்
என் இருப்பின் மீது
உங்கள் நேசத்தில் மூழ்கி
இறப்பது அல்லது ஜீவித்திருப்பது
என்மீதான துயரம் சந்தேகம் அல்லது மகிழ்ச்சி
இவையெல்லாமே
ஒரு புன்னகையைத்தான் தருகிறது
இவை எதுவும்
தியாகம் அல்லது வியப்பின் எச்சமன்று
என்மீதான உங்கள் குறுக்கீடு
மகிழ்ச்சியளிக்கிறது
என்னைக் கையளித்துவிடுகிறேன் உங்களிடம்
அதற்கான மனவுறுதியைத் துணிச்சலைத் தந்தது
நீங்கள்தானே
உங்கள் வெளிப்பாடுகளெல்லாம்
எனது இருப்பின் அல்லது இல்லாமையின் மீதான
உங்கள் பிரியமன்றி வேறென்ன
 - பத்மபாரதி
http://www.kalachuvadu.com/issue-150/page40.asp
 

Thursday, April 12, 2012

எல்லையற்றது 
இந்த உலகின் தீமை..
எல்லையற்றது 
இந்த உலகின் கருணை..
 - மனுஷ்ய புத்திரன் 
('நீராலானது' தொகுப்பிலிருந்து.)

Monday, October 10, 2011

மந்திரச்சொல் ஏதுமில்லை
மாயக்காரனும் யாருமில்லை
சுழன்று ஓடும் ஆற்றுக்கடியில்
புரண்டு படுக்கிறது
கூழாங்கல்லும்
-அழகு நிலா 

(http://www.kalachuvadu.com/issue-140/page57.asp)

Wednesday, August 3, 2011

புத்தன்



ஒரு ரணம்
கீறப்பட்டிருக்கிறது
பிரிவின் கடைசி நிமிடத்தை
திரும்பத்திரும்ப
எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
உன்மத்த இரவில்
தோளில் கைபோட்டுச் சொல்வான்
நண்பன்
இதுவும் கடந்து போகும் என
எப்போது என்ற கேள்விக்கு
பதில் சொல்லும்
திறமை வாய்ப்பதில்லை
ந்ணப்ர்களுக்கு
 நன்றி : உயிரோசை
- Lathamagan

Saturday, February 5, 2011

உச்சியிலிருந்து பூமி பற்றித்தொங்கும்
அருவியாய் நீள்கிறது
நினைவிலை.

 -  பொன்வாசுதேவன்
http://www.uyirmmai.com/Contentdetails.aspx?cid=3582

Saturday, January 29, 2011

மழைபேச்சு

காட்டுக்குள் தொலைதல்தான்
கட்டிலில் தொலைதலும்

தற்குப் பிறகும் என்னை
அதிகாலையிலேயே எழுப்பி வந்து
வெகுநேரம் விளையாடுகிறாய் இறகுப் பந்து

மேற்கே பார்க்க முத்தமிடு
கிழக்கே பார்த்து முத்தமிடு

ச்சத்தில்
மீசை முளைத்துப் பார்த்தாய் நீ
பெண்ணாகிப் போயிருந்தேன் நான்

ண்ணீருக்கு மிக நெருங்கிய
உயரத்தில் சிறகடிக்கும்
பறவையும் பறவையின் நிழலும் நாம்

நெற்றி முடியைச் சரிசெய்வதாகத்தான் தொடங்குகிறது
பெரும்பாலும் அது

திகாலைக்குக் கிடைத்தது
தேனழித்துப் படுத்த ஆதிவாசிகளின்
அதே வாசம்

து
மேகங்களுக்கிடையே திணறிய
வானூர்தியின் தருணம்

ற்றைக் காற்றுக்கு ஒரே நொடியில்
பொலபொலவென உதிர்தல் இல்லை
வாதாம் மரத்துப் பழுத்த இலைகளைப்போல்
இசைக் குறியீடுகளாய் இறங்குவது

றித் தளும்பும் கேணி
தும்பியின் தொடுதலில் வழிகிறது!


--Aruvumathi (vikatan, feb 2, 2011)

Thursday, January 6, 2011

ஒற்றை வரி
உறங்குகிறது
அதில் மொத்த கவிதையும்
விழித்திருக்கிறது


- http://raajaachandrasekar.blogspot.com/2011/01/blog-post_9206.html

Friday, December 24, 2010

புரிதல்



பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை
நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்
காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்
வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்
எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன்!
- பா.கிருஷ்ணன்
(vikatan, 29, Dec)

Tuesday, December 21, 2010

சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்
ஓடையிலே என் சாம்பல் கரையும்போது
ஒண் தமிழே நீ சலசலத்து ஓட வேண்டும்
 - Eela kavignyan

Sunday, December 12, 2010

கோப்பை முழுதும் மழை


உனக்கு நிறைய
கேள்விகள் இருந்தன
நிறைய சமாளிப்புகள்
நிறையக் குற்றச்சாட்டுகள்
நிறையக் கோபங்கள்
நீ கை அசைத்துப் போகும்போது
என்னிடம் ஒரு காதல் இருந்தது
கொஞ்சம் தேநீர் இருந்தது
நிறைய மழை இருந்தது!

vikatan(15 Dec)
http://new.vikatan.com/article.php?aid=461&sid=15&mid=1

Monday, November 15, 2010

ஆடை அணிந்து நீ என் அம்மணத்தை கேலி செய்கிறாய்..
உன் ஆடையே உன் அம்மணத்தின் கேலிதான்..
- பத்மஸ்ரீ கமல்ஹாசன்