Wednesday, April 24, 2013

போதாமையில் இசைத்தல்



வழக்கம்போல
அவன் என்னிடம் கேட்கிறான்
மல்லிகைப்பூ வாங்கி வரவா என்று
வேண்டாம்
என்று சொல்கிறேன் எனக்கே கேட்காமல்
இன்று என்ன
இருபத்து நாலு தானே ஆகிறது
அதற்குள்ளாகவா என்கிறான்
தெரியவில்லையே என்கிறேன்
பின்பு
ஏதாவது வாங்கி வாருங்கள் என்று
சொல்லும்போதே
அலைபேசி துண்டிக்கப்பட்டது
அவன் வருகிறான்
நான் இருக்கிறேன்
அவன் இருக்கிறான்
அவன் அப்படியிருக்க வேண்டியதில்லை
கண்கள் மூடிக் கிடக்கிறேன்
அமைதியாக இருக்கப் பழக்கித் தந்தது போலவே
போதாமையையும் பழக்கப் படுத்தியிருக்கும்
அவனுக்கு
நான் போதவில்லை என்பதை
உணர்ந்து தளர்கையில்
இரவு
அசைவே அற்றுக் கடந்துகொண்டிருக்கிறது.

- சக்தி ஜோதி

http://www.kalachuvadu.com/issue-157/page45.asp