Saturday, October 2, 2010

எங்கே இருக்கிறது குதிரைக் குட்டி?


மகனின் கையெழுத்துக்களை நேர்த்தியாக்கும் முயற்சியில்
அந்த விளையாட்டைத் துவங்கினேன்.
ஒ-வைச் சரியாக எழுதினால்
யானை முகம் தெரியும்.
ஃ-ல் வைக்கலாம் பொங்கல் பானையை என்றதும்
பற்றிக்கொண்டது கற்பூரம்.
உயிரெழுத்துக்கள் மெய்யாகவே
உருவங்களாய் உயிர்த்தன
கழியில் கட்டப்பட்டு இருந்த அன்னம் கழுத்தைச் சொறிகிறது அகரத்தில்
பத்மாசனத்தைப் பயிற்சி செய்கிறது
இரவின் முதல் எழுத்து
தாய்க் குதிரை ஏணியின் கடையெழுத்து
தேனியின் பிற்பகுதியில் நிற்கிறது
அதன் செல்லக்குட்டி
உகரம் நாகம்தான் என்பதை ஆட்சேபித்தவன்
அதனை லாரி மாதிரி இருக்கிறது என்றான்
ஊ-தண்ணீர் லாரியாம்
'போ' - நன்றாய்ப் பாருங்கள் தொலைபேசியின் ஒலி வாங்கியைக் கீழே வைத்திருக்கிறார்கள்
ந-காகம், த-புறா
தீயும் நீயும் கொண்டைக் கிளிகளாகிப் பறந்துவிட
மகரம் கப்பலாகிமிதக்கத் துவங்கும்முன்
ழகரம் தன் கத்தியால்
நீரைக் கிழித்து விரைகிறது
புழுக்களென நெளியும் லகரங்களை விட்டு விலகி மேய்ச்சலைத் தொடரும் ளகர ஜாதி ஆடுகள்
நித்திய கல்யாணியாகத் தெருவெங்கும் மலர்ந்திருக்கிறது 'ஐ'ப்பூக்கள்
திலகம்வைத்து அலங்காரமாக நிற்கின்றனர் மெய்யெழுத்துப் பெண்கள்!
- இளையநிலா ஜான்சுந்தர்
(Vikatan - Sep 22, 2010)

No comments:

Post a Comment